Saturday, 24 December 2011

மழைத்துளியின் நகர்தலுக்கான தூரம்

கம்பியில்
சிறிது தூரம் பயணித்து
விழுந்துக்கொண்டிருக்கும் 
மழைத்துளியின்
நகர்தலுக்கான தூரமும்
விழுதளுக்கான இடமும்
பிரத்தியேகமற்றவையாய் இருக்கிறது

காற்றில் பறக்கவிடப்பட்ட
ஒரு முத்தம்
என்னைக் கடந்தும்
போய்க்கொண்டிருக்கிறது

அடர்வற்ற முத்தத்தில்
புல்லரித்து பறக்கவிடுகிறான்
அடர்வற்ற
அல்லது
அடர்வற்றுப் போகயிருக்கும்
முத்தத்தை ஒருவன்

மோதித்தெறிக்கும் முத்தங்களில்லாமல் 
நிகழ்வதில்லை
அன்றாடங்கள்

காகிதங்கள் பொறுக்கியபடி
மாடியிலிருந்துக் கையசைக்கும்
குழந்தைக்கு
கொடுத்தனுப்பிய முத்தம்
எதேச்சையாய்
பொம்மையின் மீது
பதிந்துவிடுகிறபோதும் 
புன்னகைத்து நகர்கிறான்
ஒருவன்

பெருமளவுக்  குறைந்துவிடுகிறது
வெளியில்
முத்தங்களின் நெரிசல்.
-இயற்கைசிவம்.

No comments:

Post a Comment