Wednesday, 18 January 2012

சென்னை புத்தகக் கண்காட்சி 2012

இங்கே பிடியுங்கள் காதலின் வண்ணத்துப்பூச்சியை...

 
  கடந்த பதினான்காம் தேதி அன்று சென்னை புத்தகத் திருவிழாவிற்கு ( புதிதான வர்ணனை இல்லை எனினும் இது பொருத்தமானதுதான் ) சென்றிருந்தேன்.

  தமிழ் நாட்டின் பேருந்துக் கட்டண சூழலின் படி அந்த 170௦ கிலோ மீட்டர் தொலைவையும் இரு சர்க்கர வாகனத்தில் அடைவதே ஏழைகளுக்கு உசிதம் என்பதாலும் அதுவே பரம ஏழைகளுக்கு இருவராக எரிபொருளை பகிர்ந்துக் கொள்வதே சாலச்சிறந்தது என்பதாலும் நண்பனையும் கூடவே அழைத்துசென்றிருந்தேன் காலை 11 மணிக்கு கிளம்பி சரியாக 2.54 க்கு வாசலை அடைந்தோம்.

  ஒரு முறை கூட முன்பே திட்டமிட்டு செல்லும் புத்தகங்களை வாங்க முடிவதில்லை, அவைகளுக்கென ஒதுக்கப்படும் தொகை ஒரு பத்து காட்சி சாலைகளை தாண்டுவதர்க்குள்ளாகவே பாதியாய் இளைத்திருக்கும் இம்முறையும் அப்படி ஆகவே கூடாதென நினைத்து நுழைந்த நோக்கம் வழக்கம்போலவே ஆனது.
 முதல் புத்தகமாக கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களின் பித்தன் வாங்கியபின் வேலூர் சிப்பாய் புரட்சி , அறிஞர் அண்ணாவின் திராவிடர் நிலை, பெரியாரின் கடைசி உரை, ஸ்டாலின் , இந்துத்துவா பற்றி என பொதுவுடைமை நூல்களை வாங்கியதில் கொஞ்சம் இளைத்திருந்த தொகை கணிதத்தின் கதை, இயற்பியலின் கதை, உயிரியியல் சோதனைகள், சில வரலாற்று நூல்கள் என நடந்து, புதுப்புனல் காட்சி சாலையின் ஒரு அருமையான அறிவிப்பினை கண்டதும் குதூகலத்தின் உச்சத்தில் இன்னும் கொஞ்சம் மெலிந்தது. எழுத்தாளர் எம். ஜி . சுரேஷ் அவர்களின் வெகுவாக பேசப்பட்ட நாவல்கள் ஐந்து 250 ரூபாய்க்கு என்ற அறிவிப்புதான் அது. பிறகு காலச்சுவடில் சுகிர்தராணி, மாலதிமைத்ரி, யவனிகா, அய்யப்பமாதவன், உயிர்மை இல் மனுஷ்யபுத்திரன் மென் பொருள் புத்தகங்கள் இரண்டு என ஒரு நிலையில் திராணியற்று இருந்தது பர்ஸ். 

 கடைசியில் இம்முறையேனும் தவறாமல் வாங்கிட நினைத்த அதிக வார்த்தைகள் அடங்கிய ஆங்கில அகராதியை வாங்க முடியாமலேயே போனது வேறு கதை.

 நடுவில் வேறொரு நண்பரை சந்தித்து இதனை சொல்லும்போது தானும் பின்பற்றும் அற்புதமான யோசனை ஒன்றை சொன்னார், அடுத்த புத்தகக் காட்சிக்குள் மாதம் குறைந்தபட்சம் 300ம் அதிகபட்சம் 500ம்  சேமித்துவைக்கும்போது இதுபோன்ற எளிதான காரணங்களால் புத்தகம் வாங்கமுடியாமல் போவதை தவிர்க்கலாம் என்றார்.அட இது நல்லாயிருக்கே...!

 வேறு அதிகம் வாங்க முடியாமல் போனாலும் அநேகமாக எல்லா கடைகளிலும் விலைப்பட்டியலை தவறாமல் வாங்கி தாகம் தனித்தோம். ஒரு வழியாக மறுமுனை வந்து சேர்கையில் இரவு மணி 9.36௦ ஆகியிருந்தது, வேறுவழியின்றி அவசர அவசரமாக இரவு உணவை முடித்து கிளம்பி செஞ்சிக்கு வந்து சேர்கையில் அதிகாலை மணி 2.27 ஆகியிருந்தது.

 பொங்கல் விடுமுறை துவக்கம் என்பதால் நள்ளிரவு முழுதுமே வழி நெடுகிலும் 170௦ கிலோ மீட்டருக்கும் வாகனங்களின் உறுமலும் சீற்றமும் எங்களை தொடர்ந்துக்கொண்டே இருந்தன.நெடும்சாலை நெடுகிலும் அணிவகுத்த வாகனங்களின் முகப்பு விளக்குகளை அடிக்கடி வண்டியை  நிறுத்தச்சொல்லி தனது துல்லிய கேமராவில் வீடியோ எடுத்துக்கொண்டே வந்தார் நண்பர். ஊர் சாலையை எட்டும் வரை வேறு ஏதோ ஒன்று துரத்திக்  கொண்டே வந்தது எனக்கு மட்டும் தான் தெரியும் ( முதுகை சில்லிடச் செய்யும் வாகனங்கள் பற்றிய பயம் தான் வேறென்ன ).

 இருந்தாலும் வீடு வந்த பின்னும் இன்னும் சில மனதை உருத்திக்கொண்டிருந்தன,பார்வைக்கு முறையாக வைக்கப்படாமல், பார்த்ததும் முறையாக வைக்கப்படாமல் ஆங்காங்கே இறைந்துக் கிடந்த புத்தகங்களின் நுனிகள் அவை.

-இயற்கைசிவம்

2 comments:

  1. பேருந்து ப‌ய‌ண‌த்துக்கும் இருச‌க்க‌ர‌ வாக‌ன‌ எரிபொருள் செல‌வுக்கும் இடைப்ப‌ட்ட‌ வித்தியாச‌த்தை இன்னுமிரு புத்த‌க‌மாக்கிவிட‌லாமென்ற‌ யோச‌னையோ... புத்த‌க‌த் திருவிழாவென்றாலே ப‌டைப்பாளிக‌ளெல்லாம் சிறு குழ‌ந்தைக‌ள் திருவிழாக்க‌டைக‌ளில் பார்ப்ப‌தெல்லாம் ஆசைப்ப‌ட்டு வாங்குவ‌து போலாகி விடுகிறோம். ஒரு ப‌த்து முறை சென்று அள்ளி வ‌ந்து விட்டால், ப‌ராம‌ரிப்பின் சுமை அடுத்த‌ ப‌ய‌ண‌த்தை யோசிக்க‌ வைத்துவிடும். இருந்தாலும் ச‌மீப‌த்திய‌ வெளியீடுக‌ளின் முக்கிய‌த்துவ‌ங்க‌ள் பேர‌வாவை எழுப்பி 'இனி அள‌வாக‌ வாங்க‌ வேண்டுமென்ற‌' ச‌ப‌த‌த்தை ந‌முத்துப் போக‌ச் செய்துவிடும். திருப்ப‌திக்குப் போனால் எடுத்துச் சென்ற‌ ப‌ண‌த்தை முழுசாக‌ செல‌வ‌ழித்துவிட‌ வேண்டுமென்ப‌தொரு ஐதீக‌ம். ந‌ம‌க்கெல்லாம் புத்த‌க‌ச் ச‌ந்தை!

    ReplyDelete
  2. மிக அருமையாக சொன்னீர்கள், தங்களின் கடைசி வரி என்னை நியாப் படுத்திக்கொள்ள உதவியது சகோதரி நன்றி.

    ReplyDelete